"இது தவறான முடிவு; உடனே கைவிடுங்க" - டெல்லியை அதிரவைத்த அமைச்சர் பிடிஆர்!
துணி நெய்ய தேவையான நூல், மோட்டார் உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 30 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது சிறு, குறு தொழில் முனைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே நலிவடைந்து போயுள்ள இந்த துறைக்கு பேரிடியாக வந்திறங்கியுள்ளது மூலப்பொருட்களின் விலை உயர்வு.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது கோவை மாவட்டமும் தான். ஆகவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோவையிலுள்ள 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதுஒரு புறம் என்றால் திருப்பூர், காஞ்சிபுரத்திற்கு ஜிஎஸ்டி மூலம் வினை வந்துள்ளது. ஆம் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளன. 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயரவுள்ளது.
இதனை ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரனமாக துணிகளின் விலை தாறுமாறாக உயர அதிக வாய்ப்பிருக்கிறது. திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, அதேபோல பட்டுப்புடவைகளுக்கும் இதே ஜிஎஸ்டி தான் என்பதால் சாதாரண பட்டுப்புடவையே 3,000 ரூபாய் வரை அதிகரிக்க போகிறது. கைத்தறி நெசவாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிரொலித்திருக்கிறார்.
இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தான் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் பிடிஆர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12 % உயர்த்தியது தவறான முடிவு. இந்த முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்துறையில் இருக்கும் பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். பல மாநிலங்களில் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அலுமினியம், எஃகு, தாமிரம் ஆகிய மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.