டி.எம்.சி. எம்.பி. டெரெக் ஒபிரையன் இடைநீக்கம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 13ஆக உயர்வு

 
திரிணாமுல் காங்கிரஸ்

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒபிரையனின் இந்த ஒழுக்கமற்ற நடத்தைக்காக தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் (திங்கள்) தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடாளுமன்றம்

இருப்பினும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வெளிநடப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 நிறைவேறியது. முன்னதாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தபோது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒபிரையன் விதி புத்தகத்தை அதிகாரிகள் அமரும் மேஜை  மீது வீசி வெளிநடப்பு செய்தார். டெரிக் ஒபிரையனின் இந்த ஒழுக்கமற்ற நடத்தைக்காக தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

டெரெக் ஒ பிரையன்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒபிரையன் டிவிட்டரில், கடந்த முறை நான் மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அரசாங்கம் வேளாண் சட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்தபோதுதான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  இன்று பா.ஜ.க. நாடாளுமன்றத்தை கேலி செய்வதையும், தேர்தல் சட்ட மசோதா 2021ஐ  அமல்படுத்த முயற்சி செய்வதையும் எதிர்த்து போராடிய வேளையில் இடைநீக்கம் செய்யப்பட்டேன். விரைவில் இந்த மசோதாவும் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.