பா.ஜ.க.வின் விஷம் பல மாநிலங்களில் பரவியுள்ளது... திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான காங்கிரஸ்... ஜாகோ பங்களா
பா.ஜ.க.வின் விஷம் பல மாநிலங்களில் பரவியுள்ளது, திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான காங்கிரஸ் என்று திரிணாமுல் காங்கிரஸின் ஊதுகுழலான ஜாகோ பங்களா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலான ஜாகோ பங்களா பத்திரிகை நேற்று தனது தலையங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான காங்கிரஸ் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசால் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வின் விஷம் பல மாநிலங்களில் பரவியுள்ளது. அங்குதான் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளே நுழைகிறது.

காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் அவர்களால் பா.ஜ.க.வை தடுக்க முடியவில்லை. காங்கிரஸ் போரினால் சோர்வடைந்துள்ளது மற்றும் உட்கட்சி பூசலால் பாதிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இப்போது (முக்கிய எதிர்க்கட்சியாக) பொறுப்பேற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான காங்கிரஸ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சியாக உருவெடுக்க விரும்புகிறது. இதற்காக, கோவா, திரிபுரா உள்பட பல மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தடம் பதிக்க தொடங்கியுள்ளது. மேலும் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.


