ஜெயலலிதா சொன்ன மூன்று பெயர்கள்
அப்போது ஜெயலலிதா சொன்ன மூன்று பெயர்களை இப்போது நினைவுகூர்ந்திருக்கிறார் உதவியாளர். மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சைதைதுரைசாமி மற்றும் தனது உதவியாளர் பூங்குன்றனிடம் சொன்ன விசயம் குறித்து பூங்குன்றன் இன்று நினைவு கூர்ந்திருக்கிறார்.
அதுகுறித்து அவர், ’’அம்மா அவர்களுடைய நிறைவேறாத ஆசை ஒன்றை இன்றைய மகம் நட்சத்திரத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன். அன்றைய மேயர் சைதை துரைசாமி அவர்கள் அம்மா அவர்களை சந்தித்த போது கல்வி அறக்கட்டளை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது என்னை அழைத்த அம்மா அவர்கள் மூன்று பெயர்களை கொடுத்து நியூமராலஜி எதற்கு சரியாக வருகிறது என்று பார்த்து சொல் என்றார். அம்மாவை சந்தித்து விட்டு என்னை பார்த்த சைதை துரைசாமி அவர்கள், தம்பி உன்னை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய நண்பர் புலவருடைய மகன் மீது அம்மா அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை மனம் குளிரச் செய்கிறது.
அம்மா அவர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அதில் பூங்குன்றனையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மிகப் பெரிய நிதி உதவியை நான் வழங்குகிறேன். உங்கள் இருவர் பெயரில் அது நடக்கட்டும் என்று சொன்னார் என்று மிகுந்த உவகையோடு என்னிடம் தெரிவித்தார். என்னை அழைத்த அம்மா அவர்கள் இந்த தகவலை என்னிடம் சொல்லி அறக்கட்டளைக்குரிய ஏற்பாடுகளை சைதை துரைசாமி அவர்கள் செய்வார். அது குறித்த தகவல்களை அவர் தெரிவித்தால், உடனே என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.
எனக்குள், அம்மா அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை சந்தோசத்தை அளித்தாலும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ! என்ற பயமே அதிகமாக இருந்தது. கடைசி மனிதன் இருக்கும் வரை அந்த அறக்கட்டளை செயல்பட வேண்டும் என்று நினைத்த புரட்சித்தலைவியின் ஆசை இன்றுவரை நிறைவேறாமல் இருக்கிறது. அம்மா அவர்கள் பெயரில் அறக்கட்டளையை தொடங்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. அதை பெரிதாக கொண்டு செல்லும் அளவிற்கு வசதியும் என்னிடம் இல்லை. எனவே சைதை துரைசாமி அவர்கள் அம்மா அவர்களின் ஆசையை நிறைவேற்ற முயல வேண்டும். அறக்கட்டளை குறித்த அனுபவம் உங்களுக்கு நிரம்ப உண்டு. மற்றவர்கள் முயற்சி செய்தலும் இனிதே! தொண்டர்களின் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், இயலாதவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற அம்மாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். அம்மா அவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டால் அதற்கு என்றும் நான் மாடாய் உழைப்பேன். நாயாய் நன்றி செலுத்துவேன்’’என்று பதிவிட்டிருக்கிறார்.