விஜய் இல்லாவிட்டாலும் போட்டி கடுமையாக இருக்கும்- திருநாவுக்கரசர்
விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் தேர்தல் போட்டி கடுமையாகத்தான் இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், “தேர்தல் என்றாலே போட்டி கடுமையாகத் தான் இருக்கும். விஜய் கட்சி ஆரம்பித்ததால் தான் தேர்தலில் போட்டி கடமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றாலும் தேர்தலில் போட்டியெடுக்கக்கூடிய கட்சிகளுக்குள் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தேர்தல் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் தேர்வு மாறி தான். அதில் பாஸ் செய்துதான் வரவேண்டும். இதில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் மார்க் போடுவார்கள். கட்சிகளுக்கான பரிசோதனை களம் தான் தேர்தல்.
விஜயைப் பொறுத்தவரை கட்சி ஆரம்பித்துள்ளார் ஒரு கூட்டம் மட்டும் நடத்தியுள்ளார். 2025 என்ற ஒரு ஆண்டு மட்டும் தான் தேர்தலுக்கு உள்ளது. அதற்குள் விஜய் அவரது கட்சியின் கட்டமைப்பை எப்படி ஏற்படுத்தப் போகிறார்? சுற்றுப்பயணத்தை எவ்வாறு வைக்கப் போகிறார்? மக்களை எப்படி சந்திக்கப் போகிறார்? எந்த பிரச்சினைகளை மையமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்கிறார்? அதற்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. இதுபோல் பல விஷயங்கள் இருக்கிறது. அவர் கட்சி வேலை செய்யும் பொழுது மற்ற கட்சியினர் தூங்கிக் கொண்டா இருப்பார்கள்?. தேர்தலில் போட்டி போடக்கூடிய அனைத்து கட்சியும் தான் தேர்தலில் வேலை செய்வார்கள்.
இது மட்டுமின்றி கூட்டணி பலம் வேறு இருக்கிறது. இந்தியாவே கூட்டணி என்ற அடிப்படையில் தான் உள்ளது. பலரிடம் கூட்டணி அமைத்த பாஜக கூட பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதே போல் பல மாநிலங்களிலும் கூட்டணி நான் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கூட்டணி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. ஏற்கனவே சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி போன்ற தேர்தலில் வெற்றி பெற்று வெற்றியை நிரூபித்திருக்கின்ற கூட்டணியாக இந்த கூட்டணி இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் கூட்டணி போவார்களா தனியாக நிற்பார்களா என்ற நிலையானது இல்லாமல் இருக்கக்கூடிய நிலையில் நிலையான ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போற கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு புது கோஷம் கிடையாது. இது பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகிறது தான். கட்சி ஆரம்பிக்கிற அனைவரும் குறைந்தது முதலமைச்சருக்கு கீழ் யாரும் சிந்திப்பது கிடையாது. கூட்டணியில் மந்திரி சபையில் இடம்பெறுவதற்கு குறைத்து யாரும் சிந்திப்பதும் கிடையாது. அனைவரும் கூட்டணியில் இடம் பெற வேண்டும் அமைச்சர்களாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் கட்சி நடத்துகிறார்கள் அதை குற்றம் என்று சொல்ல முடியாது” என்றார்.