"இதோ இங்க தான் இருக்கேன்".. குஷ்புவுக்கு மறைமுக பதிலடி - திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை!
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் பல்வேறு திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் விவகாரத்தைக் கையிலெடுத்து விழித்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தமிழக தலைவர் அண்ணாமலை திருதிருவென முழிக்கிறார். மற்ற கிளை தலைவர்கள் எல்லாம் ஜகா வாங்கி கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த மாணவி பேசிய முழு வீடியோ தான். அந்தப் புதிய வீடியோவில் மதமாற்றம் குறித்து எந்தவொரு விஷயத்தையும் மாணவி பேசவில்லை. மாறாக அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்கிறார் அந்த மாணவி.
இதனால் தமிழக பாஜக ஒரு விஷயத்தை பொய்யாக சித்தரித்து மதக் கலவரம் ஏற்படும்படியாக பிரச்சாரம் செய்தது அம்பலமாகிப் போனது. இந்த விவகாரம் வெளியில் தெரிவதற்கு முன்னர் காலில் சலங்கை கட்டி ஆடிவந்தனர் பாஜக தலைவர்கள். அதில் ஒருவர் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவும் ஒருவர். இதுதொடர்பான ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்வாரே அந்த திருமாவளவன் எங்கே?” என கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு மறைமுக பதிலடியை இன்று கொடுத்திருக்கிறார் திருமாவளவன்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலினை அவர் சந்தித்தார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அரியலூர் மாணவி தற்கொலை பிரச்சினையில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். முதல்வர் அகில இந்திய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக கூறினார்.
அது வரவேற்கக் கூடிய ஒன்று, அந்த நிலைப்பாட்டை விசிக சார்பில் வரவேற்று பாராட்டினோம். மிக சீரிய முயற்சி, அதுவும் சனாதன சக்திகள் கொட்டமடிக்கிற இந்த சூழலில், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, முதல்வர் முன்னெடுத்திருக்கிற இந்த முயற்சி அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஏற்கெனவே மறைந்த முதல்வர் கருணாநிதி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அத்தகைய சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றார்.