"பொய் பொய்.. கையும் களவுமாக பிடிபட்ட மோடி.. நாட்டுக்கே அவமானம்" - சீறிய திருமாவளவன்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் வேளையில் மீண்டும் பெகாசஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் தான் இந்த பெகாசஸ் ஓனர். ஒரு நாட்டின் நிறுவனத்திடம் தனியாள் ஒருவர் வாங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இந்திய அரசு தான் பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கி அனைவரது செல்போனையும் ஒட்டுக் கேட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.
ஆனால் இதை மறுக்கிறது மத்திய அரசு. இச்சூழலில் நேற்று முன்தினம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், மத்திய அரசு எப்போது ஸ்பைவேரை வாங்கியது என்ற தகவல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியையும் அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியு யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது.
உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும். மோடி அரசு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து உளவு செயலியை வாங்கியிருக்கிறது. பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த செயலி வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கான தொகை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் 10 போன்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் உளவு செயலிக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்து உள்ளது அதாவது இந்திய மதிப்பில் 5 கோடியே 25 லட்சம் ரூபாய். பிரதமர் மோடி அரசு சுமார் 300 கோடி ரூபாய்க்கு இந்த உளவு செயலிகளை வாங்கி இருக்கிறது. அதன் மூலம் சுமார் 600 போன்களை அது உளவு பார்த்துள்ளது. மோடி அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து 300 கோடி ரூபாயை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என்ற அமைப்பின் மூலமாக இஸ்ரேலுக்கு அனுப்பி இருப்பது நிரூபணமாகி உள்ளது.
பெகாசஸ் விவகாரத்தில் இனி மேல் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத அளவுக்கு கையும் களவுமாக மோடி அரசு பிடபட்டு விட்டது எனவும், இந்த தேச துரோக செயல் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரும் பொய்யான தகவல்களை கூறியுள்ளார்கள். இதற்கெல்லாம் பிரதமர் மோடியை பொறுப்பேற்க வேண்டும். அன்னிய நாட்டு உளவு செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து சட்டவிரோத மட்டுமல்ல தேச துரோகம். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பது நாட்டுக்கே அவமானம்” என குறிப்பிட்டுள்ளார்.