மறைமுக தேர்தக் குளறுபடி : மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை ஆறுதல், நம்பிக்கையை அளிக்கிறது - திருமாவளவன்..

 
மறைமுக தேர்தக் குளறுபடி : மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை ஆறுதல், நம்பிக்கையை அளிக்கிறது - திருமாவளவன்..

தமிழகத்தில் ஆங்காங்கே மறைமுக தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினை, மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் அமைந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே குழப்பங்கள் ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

மறைமுக தேர்தக் குளறுபடி : மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை ஆறுதல், நம்பிக்கையை அளிக்கிறது - திருமாவளவன்..

இந்த நிலையில், இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. தேர்தலில் நடந்தேறிய குழப்பங்களின் விளைவாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய எமக்கு ஆழ்மனதை உலுக்குவதாகவும் உள்ளது. முதல்வரின் இத்தகைய போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பை வி.சி.க. சார்பில் நெஞ்சாரப்பாராட்டுகிறோம்.

ஒருசில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த அத்துமீறல்களுக்கும் தி.மு.க. தலைமைக்கும் தொடர்பில்லையென்பது நாடறிந்த ஒன்று. எனினும், அதனை சீர்செய்யவேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றியிருப்பது மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஸ்டாலின் திருமாவளவன்

‘திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகிட வேண்டும்’ என அறிவித்துள்ளார். இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உறுதி குலையாமல் காப்பாற்றியுள்ள அண்ணன் தளபதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

கூட்டணிக்குத் தலைமை ஏற்றிருக்கும் அண்ணன் தளபதி தமது அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கும் தோழமை உணர்வை விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக புரிந்துகொண்டு உள்வாங்கி கொள்கிறோம். சமூக நீதி காக்கும் அறப்போர்க்களத்தில் தி.மு.க. முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு என்றென்றும் உடன் நிற்போம். உற்றத்துணையிருப்போம் என்று உறுதியளிக்கிறோம். அத்துடன், வருங்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமை பொறுப்புகளை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.