“திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை”... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய செல்வப் பெருந்தகை
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய செல்வபெருந்தகை, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். கூட்டணியில் உரிய மரியாதை இல்லை. நமக்கு உரிய சுய மரியாதை, கெளரவம் கிடைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலிமை படுத்த வேண்டும். வலிமை படுத்தினால் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும். வரும் 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்கு வலிமையாக உள்ளோம்” என்றார்.
ஆனால் நிகழ்ச்சிக்கு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “நான் காங்கிரஸ் கட்சியை வலிமை படுத்த வேண்டும் என்றே கூறினேன். கூட்டணியில் எங்களுக்கு 9 இடங்கள் மட்டுமே கொடுத்தனர். முன்பு எங்களுக்கு இருந்த வாக்கு வங்கி வேறு. இப்போது உள்ள வாக்கு வங்கி வேறு. எங்கள் கட்சிக்கு வரலாறு, கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் உள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கட்சி நிர்வாகிகளை ஊக்குவிக்கவே 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்கு வலிமையாக உள்ளோம் என பேசினேன். ” எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.