விஜய்யை கட்டுப்படுத்தும் மூவர் அணி... தவெகவில் வெடிக்கும் உட்கட்சி பஞ்சாயத்து!
முழுநேர அரசியல்வாதியாக மாற இன்னும் 1 அல்லது 2 மாத காலம் தேவைப்படும் நிலையில் இருக்கிறார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய். அதற்குள்ளாகவே அடுக்கடுக்கான பஞ்சாயத்துகளால் திணறி வருகிறது பணையூர்.. என்ன நடக்கிறது தவெகவில் ? என விரிவாகவே விசாரித்தோம்.

2 மாதங்களுக்கு ஒருமுறை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த விஜய், ஜனநாயகன் படப்பிடிப்பையும் , அது தொடர்பான அனைத்து பணிகளையும் இன்னும் 2 மாதங்களுக்குள் முடித்து தன்னை முழுநேர அரசியலில் ஈடுபடுத்த உள்ளார். ஏற்கனவே கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தை முடித்த நிலையில் , எஞ்சிய மாவட்ட செயலாளர்களை நியமித்து ஜூலை இரண்டாவது வாரத்தில் திருச்சியில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். இந்நிலையில் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா விஜய்யை சந்தித்து பேச முடியாத சூழலில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வருகின்றன.
புஸ்ஸி ஆனந்த், ஜெகதீஷ் பழனிசாமி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அடங்கிய மூவர் அணி தான் தற்போது விஜய்யை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் உள்ளனர். தங்களை மீறி யாரும் விஜயை சந்திக்க கூடாது என்பதில் தொடங்கி, கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் வரை இவர்கள் மட்டுமே முடிவு எடுக்கும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கின்றனர் உட்கட்சி விபரம் அறிந்தவர்கள். ஆதவ் அர்ஜூனாவிற்கு தடைபோடும் அதே நேரத்தில், கட்சியின் பொருளாளராகவும் விஜயின் ஆடிட்டராகவும் பல ஆண்டுகளாக உடன் பயணிக்கும் வெங்கட்ராமனையும் ஓரம் கட்ட இந்த மூவர் அணி சமீப நாட்களாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பிரஷாந்த் கிஷோரால் உருவாக்கப்பட்ட முன்னாள் ஐபேக் ஊழியர்களை கொண்ட Simple Sense என்ற நிறுவனம் TVK சமூக ஊடக பணிகளை செய்து வருகிறது. சென்னை கிண்டியில் இயங்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணியாற்றினர். இவர்களுக்கான ஊதியத்தை ஆதவ் அர்ஜுனா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது பிரஷாந்த் கிஷோருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக சுமார் 40 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. எஞ்சிய 10 பேரை தேனாம்பேட்டையில் உள்ள பிரஸ்டீஜ் கட்டிடத்தில் தொடங்கப்படும் TVK WAR Room பணிகளில் சேர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Simple Sense என்ற நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கும் TVK WAR ROOM அலுவலகத்தில் வேலை வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இல்லையென்றால், நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று முறையிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.


