‘’இந்த பாஜகவுக்கு இடிக்கிறதே வேலையா போச்சு! போன மாசம் தலைமைச்செயலகத்தை இடிப்போம்; இந்த மாசம் வீட்டை இடிப்போம்! ’’

 
ம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலைமைச் செயலகத்தை இடிப்போம் என்று பேசி போன மாதம் பரபரப்பை ஏற்படுத்திய பண்டி சஞ்சய் குமார் இந்த மாதம் வீடுகளை இடிப்போம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் பாஜக மகளிர் மோர்ச்சா கூட்டம் நடந்தது.   இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பங்கேற்று பேசினார்.  

 அப்போது ,  தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்,  பாலியல் குற்றங்கள்,  கொலை சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களின்  வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து தர  மட்டமாக்குவோம் என்று ஆவேசப்பட்டார்.

ப்

 தொடர்ந்து பேசிய அவர் ,  பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அரசு செயல்பாட்டை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும். பாஜக அரசு வந்த பின்னர் பெண்களை இழிவாக பார்க்கக்கூடிய கும்பல் பயப்பட வேண்டும் என்றவர்,   தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் -தெலுங்கானா ராஷ்டிரிய சமதியை விட பாஜக மகளிர் அணி தான் பலமாக இருக்கிறது என்றார்.

 நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுபானம் கட்டுப்படுத்தப்படும்.   வரும் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 இவர்தான் போன மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா தலைமைச் செயலகத்தை இடிப்போம் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.   இந்த நிலையில் இம்மாதம் பாலியல் குற்றவாளிகளின் வீடுகளை இடிப்போம் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.  

 இதனால்,   இந்த பாஜகவினருக்கு எதையாவது இடிப்பதே வேலையாக இருக்கிறது என்று விமர்சனம் இன்று முணுமுணுத்து வருகின்றனர் தெலுங்கானா மக்கள்.