மனைவியிடம் பேசிய முதல் வார்த்தை! அந்த டேஸ்ட் எனக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஒரு காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது என்று போய்க்கொண்டிருந்தது. பிக்னிக் போறது, டூர் போறது இன்று இருந்துச்சு. திருமணத்திற்கு பிறகு அது குறைந்தது. அப்புறம் அரசியல் என்று ஸ்பீடாக போய்விட்டது என்று மனம் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணில் அவர் இவ்வாறு மனம் திறந்து பேசியிருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் முதல்வரை நேர்காணல் செய்திருக்கிறார்.
ரொம்ப சின்ன வயசிலேயே திருமணம் ஆகிவிட்டதே? என்ற கேள்விக்கு, ’’எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் அப்படித்தான்’’ என்று சொன்னவரிடம், ’’உங்களுக்கு பெண் கொடுக்கவே பலரும் யோசித்தார்களாமே? என்று கேட்க, ’’ ஆமாம். அப்பா அரசியலில் இருந்ததால் பலரும் பெண் கொடுக்கவே பயந்தார்கள். ஆனால் திருவெண்காட்டில் சிவராமன் என்பவர் முரசொலி மாறனுக்கு உறவினர். அவர் பெண் கொடுக்க முன் வந்தார். முதல் நாள் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சென்று பெண்ணை பார்த்து விட்டு வந்தார்கள். அடுத்த நாளே என்னை அழைத்துச் சென்று பெண்ணை பார்க்கச் சொன்னார்கள். நான் திருமணம் என்று முடிவெடுத்து பார்த்த ஒரே ஒரு பெண் துர்கா தான் அதுவே முடிவாகிவிட்டது’’ என்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் பேசிய முதல் வார்த்தை என்ன? என்ற கேள்விக்கு, ’’திருமணத்திற்கு பிறகு பெண் அழைப்பு நடந்த போது பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு புறப்படும் போது, அவரின் குடும்பத்தினரிடம் கண்கலங்கி அழுதார் துர்கா. அப்போது நான் ஒரே வார்த்தை சொன்னேன். இன்னும் நிறைய அழ வேண்டியது இருக்குது’’ என்று சொன்னேன் என சொல்லிவிட்டு பெரிதாக சிரிக்கிறார் முதல்வர்.
திருமணத்திற்கு முன்பு மனைவியிடம் பேசி இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ’’திருமணத்திற்கு முன்பு பேசவே இல்லை’’என்றவரிடம், பேச முயற்சிக்கவில்லையா என்று கேட்க, ’’பேச முயற்சித்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ரொம்ப கட்டுப்பாடு’’என்கிறார்.
மனைவின் சமையல் பற்றிய கேள்விக்கு, ’’ ஸ்கூல் லைஃப்லயே துர்கா திருமணம் செய்து கொண்டதால் மனைவிக்கு சமையலில் அவ்வளவு ஆக பயிற்சி இல்லை. என் அம்மா தான் கற்றுக் கொடுத்தார். அதன் பின்பு சமையலில் கற்று தேர்ந்து விட்டார். தலைவரே என் மனைவி வைக்கும் மீன் குழம்பு தான் ரொம்ப விரும்பி சாப்பிடுவார். மீன்குழம்பு, கொழுக்கட்டை என் மனைவியை சமைத்து தரச்சொல்லி அடிக்கடி கேட்பார்’’என்றவரிடம்,
நீங்க சாப்பாட்டு விசயத்துல எப்படி? என்று கேட்க, ‘’அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன். சைவம் தான் விரும்பி சாப்பிடுவேன். அதற்கு காரணம் வெளியூர்களுக்கு அதிகம் போவதால் வயிற்றுப் பிரச்சனைகள் வரும். அதை தவிர்ப்பதற்காகத்தான் அசைவ உணவுகளை அதிகம் தவிர்த்து வருகிறேன். வைரமுத்து ஒரு முறை மேடையில் பேசும்போது சொன்னார். பசியோடு உட்கார் பசியோடு எழுந்திரு என்று சொன்னார். அதே மாதிரி தான் நான் பசியோடு உட்காருவேன் பசியோடு எழுந்திருப்பேன். அதிகம் சாப்பிட மாட்டேன் அளவோடு தான் சாப்பிடுவேன்’’என்றவரிடம்,
சைவம், அசைவத்தில் பிடித்தது என்ன? என்ற கேள்விக்கு, ‘’சைவத்தில் சாம்பார், தயிர் சாதம், முட்டை கோஸ் பொறியல், பீட்ரூட் பொறியல் ரொம்ப பிடிக்கும். அசைவத்தை பொறுத்த வரைக்கும் நம்பர் ஒன் மீன் குழம்பு. அதற்கப்புறம் சிக்கன்.
பொதுவாக தஞ்சாவூர்க் காரங்களுக்கு விரால் மீன் , நெத்திலி மீன் எல்லாம் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அப்பாவும் அயிரை மீனை விரும்பி சாப்பிடுவார். அந்த டேஸ்ட் தான் எனக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்’’என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
’’சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது பேசக்கூடாது என்று மனைவி பலமுறை கண்டிப்பாக சொல்லுவாங்க . ஆனால் என்னால் அதை தவிர்க்க முடியாது’’என்ற முதல்வரிடம்,
நீங்க ரொம்ப கண்டிப்பான ஆளா? என்ற கேள்விக்கு, ’’ வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ரொம்ப கண்டிப்பான ஆள் மாதிரி தெரியும். ஆனால் ரொம்ப பாசமா நடந்துக்குவேன். நான் எங்கே ஏதும் வெளியூர் சென்று விட்டால் தலைவருக்கு போன் பண்ணா விட்டாலும் தலைவர் எனக்கு போன் செய்து என்னிடம் விசாரிப்பார். அதையே தான் இப்போது நானும் செய்கிறேன். உதயநிதி எங்கே வெளியூர் சென்று விட்டாலும் உதயநிதி எனக்கு போன் செய்யாவிட்டாலும் நானே போன் செய்து எங்கே இருக்கிறாய் எப்படி இருக்கிறாய் என்று விசாரிப்பேன். இது தலைவர் கிட்டே இருந்து நான் கற்றுக் கொண்டது.
கட்சி ரீதியாக தலைவர் என்னிடம் வெளியூரில் இருந்தாலும் அடிக்கடி தொடர்பு கொள்வார். நான் மேடையில் பேசினதை பார்த்தாயா? டிவியில் பேட்டி கொடுத்ததை பார்த்தாயா? என்று கேட்பார். குடும்ப ரீதியாக ஏதாவது முக்கியமான பிரச்சனை, யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தான் பேசிக் கொள்வோம். அதே பழக்கம் தான் இப்போது எனக்கும் இருக்கிறது’’என்கிறார்.
உங்க வீட்டில் பிடித்த இடம் எது? என்ற கேள்விக்கு, மீன் தொட்டி. ப்ரீயா இருக்கும்போதெல்லாம் அதன் அருகே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன் என்கிறார்.