அதிரடி காட்டிய முதல்வர்! பிரதமர் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

 
m

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளார் மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா.  மேகாலயா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு அங்கு பிரதமர் பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறார்.

 மேகாலய சட்டப்பேரவைக்கான தேர்தல் இம் மாதம் 27ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.   60 தொகுதிகளை கொண்ட அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.

ma

இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையிலான பாஜக பிரச்சாரமும்,  நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரமும் அங்கே நடைபெற இருக்கிறது.   இதற்கிடையில் பாஜக பிரச்சாரத்திற்கான பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்திருக்கிறது.

அம் மாநில முதல்வர் கான்ராட் சங்மா தொகுதியில் பிஏ சங்மா பெயரிலான புதிய விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இதன் திறப்பு விழா டிசம்பர் மாதமே முடிந்து விட்ட நிலையில் , அங்கு மோடியின் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

 இது குறித்து முதல்வர் கான்ராட் சங்மா,   திறப்பு விழா முடிந்துவிட்டாலும் விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிகள் 90% மட்டுமே முடிந்திருப்பதால் அங்கு கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.   இதற்கு பதிலடி கொடுத்து தேசிய மக்கள் கட்சியினரும் அதன் முதல்வரும் மோடி அலையைக் கண்டு பயந்துவிட்டார்கள் என்று பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 இதற்கிடையில் பிரதமர் மோடியின் பிப்ரவரி 24 பிரச்சாரம் ஷில்லாங் பகுதியில் மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.