அதிமுகவிடமிருந்து 65 இடங்கள் வரை கேட்க பாஜக திட்டம்! நயினார்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன?
அமித்ஷா சென்னை வரும்போது என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும், ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெறும் முதல் பொதுக்கூட்டம் மோடி தலைமையில் நடைபெறும், அதற்கான பணிகளை மேற்கொள்ள நயினாருக்கு அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் நேற்று இரவு சந்தித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வலுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக விடம் பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், பாஜகவின் மூலம் கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளுக்கும் சேர்த்து 65 இடங்கள் வரை கேட்க இருப்பதாக, பாஜக வலுவாக உள்ள தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார்.
மேலும், என்டிஏ கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும், டிசம்பர் மாத இறுதிக்குள் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாகவும், அந்த வருகையின் போது கூட்டணி இறுதி வடிவம் பெறும் எனவும், ஜனவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் தேசிய ஜனநாநக கூட்டணியின் தலைவர்கள் ஒரே மேடையில் இருப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, வலுவாக உள்ள தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளவும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்தமுறை அதிக இடங்களை பெற்று போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் நயினார் நாகேந்திரனிடம் அமித்ஷா தெரிவித்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


