பெண்ணின் திருமண வயதை மாற்றுவது குழந்தைகளின் வாழ்க்கையை கெடுக்கும்... தெலங்கானா வக்பு வாரிய தலைவர்
பெண்ணின் திருமண வயதை மாற்றுவது (உயர்த்துவது) குழந்தைகளின் வாழ்க்கையை கெடுக்கும் என்று தெலங்கானா வக்பு வாரிய தலைவர் முகமது சலீம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை அண்மையில் பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதேசமயம் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா வக்பு வாரிய தலைவர் முகமது சலீம் கூறியதாவது: தெலங்கானா காஜிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து, பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இஸ்லாத்தில் எழுதப்பட்டுள்ளபடி, ஆண், பெண் இருபாலருக்கும் முதிர்ந்த உடனேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். முன்பு பெண்ணின் திருமணத்துக்கு 18 வயது கட்டாயமாக்கப்பட்டது, நாங்கள் அதை பின்பற்றி ஏற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது 21 வயதை ஏற்க முடியாது. தெலங்கானா மக்கள் பீதி அடைய வேண்டாம். ஏனெனில் மசோதா இப்போது துணை குழுவுக்கு வந்து விட்டது. அதன் பிறகு நீண்ட நடைமுறையை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அதற்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளது. இந்த விவகாரத்தை முதல்வர் சந்திரசேகர் ராவிடம் எடுத்து சென்று, நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தடுக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
திருமண வயதை மாற்றுவது குழந்தைகளின் வாழ்க்கையை கெடுக்கும். குழந்தைகளுக்கு 21 வயதில் திருமணம் செய்ய சொல்கிறார்கள், அவர்கள் 10ம் வகுப்பில் முதிர்ச்சியடைகிறார்கள். பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்தவுடன் பெற்றோர்கள் நிம்மிதி அடைகின்றனர். நாங்கள் முத்தலாக்கை (முத்தலாக்கு எதிரான சட்டத்தை) ஏற்றுக்கொண்டோம். ஆனால் இதை (பெண்ணின் திருமண வயது 21) எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் மசோதா முற்றிலும் தவறானது. வாரியம் அதை கண்டிக்கிறது. வக்ப் வாரியம், ஹசாத் பிரதிநிதிகள் காஜிகளுடன் சேர்ந்து தெலங்கானா முதல்வரை சந்தித்து விரைவில் ஒரு குறிப்பாணை வழங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.