பா.ஜ.க., டி.ஆர்.எஸ். அரசுகள் கடந்த 8 ஆண்டுகளாக வரிகளை விதித்து மக்களை கொள்ளையடித்து வருகின்றன.. காங்கிரஸ்

 
ரேவந்த் ரெட்டி

பா.ஜ.க., டி.ஆர்.எஸ். அரசுகள் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வரிகளை விதித்து மக்களை கொள்ளையடித்து வருகின்றன என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி 10 கி.மீட்டர் பாதயாத்திரையை முடித்துக் கொண்டு செவெல்லா குறுக்கு சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி பேசுகையில் கூறியதாவது: மத்திய மற்றும் தெலங்கானாவில் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாத யாத்திரை நடத்தப்பட்டது.

பா.ஜ.க.

பா.ஜ.க., டி.ஆர்.எஸ். அரசுகள் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வரிகளை விதித்து மக்களை கொள்ளையடித்து வருகின்றன. சாமானியர்களிடம் இருந்து கிட்டத்தட்ட ரூ.32 லட்சம் கோடியை பல்வேறு வரிகளாக கொள்ளையடித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2014ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60ஆக இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை ரூ.108ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோலின் உண்மையான (லிட்டருக்கு) விலை ரூ.40-45.  ஆனால் மக்கள் ரூ.108 கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல் ரூ.400 மதிப்பிலான சமையல் கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

கே.சந்திரசேகர் ராவ்

டிராக்டர்களை இயக்க பயன்படுத்தும் டீசல் விலை உயர்வால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின்  விளைபொருட்களை கொள்முதல் செய்ய பா.ஜ.க. மற்றும் டி.ஆர்.எஸ். அரசுகள் தயாராக இல்லை. தெலங்கானா மாநிலத்தில் நெல்களை விற்பனை செய்ய காத்திருந்த பல விவசாயிகள் உயிரிழந்தனர். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பணவீக்கத்தை குறைக்க முயன்றார்.ஆனால்அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, மதுபானங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை மக்கள் கலால் வரி மற்றும் பிற வரிகளாக செலுத்துகிறார்கள் என்பதுான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.