"எலெக்சன் இருக்கு"... கடுப்பான மேலிடம் - திடீர் பல்டி அடித்த தேஜஸ்வி சூர்யா!
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கட்டாய மதமாற்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கர்நாடக சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மதமாற்ற சட்டத்தை நிறைவேற்றியது பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் கட்டாயமாக ஒருவரை மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படாலாம். இது நிறைவேறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா சர்ச்சையாக பேசினார்.

கிறிஸ்துமஸ் அன்று உடுப்பியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பல்வேறு காலகட்டங்கள் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் ஏராளமான இந்துக்கள் பிற மதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஆகவே இப்போது இந்துக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிற மதங்களுக்குச் சென்ற இந்துக்களை தாய் மதத்திற்கு திருப்பி அழைத்து வருவது தான். பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் உள்பட அவர்களை அனைவரையும், தாய் மதமான இந்து மதத்திற்கு திருப்பி அழைத்துவர வேண்டும்.

இந்த தாய் மதம் திரும்பும் திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலிருந்து தொடங்குவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் தென்னிந்தியாவில் முகலாயர்கள் உள்ளிட்டோரை ஊடுருவ விடாமல் தடுத்து நிறுத்திய வரலாறு கர்நாடகாவுக்கு உண்டு. ஆண்டாண்டு காலமாக இந்துக்களை மிரட்டி, துன்புறுத்தி, ஏமாற்றி பிற மத்திற்கு மாற்றியுள்ளனர். இதற்காக கோயில்கள், மடங்களுக்கு நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆண்டுக்கு இத்தனை பேரை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்துவருதல் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்” என்றார்.

அவரின் இப்பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அவ்வாறு இந்து மதத்திற்கு அவர்களை வரவழைத்தால் அவர்களை எந்தச் சாதியில் சேர்ப்பீர்கள் என்ற கேள்வி எழுந்தது. சாதி கொடுமைகள் தாழாமல் தான் இந்து மதத்திலிருந்து அவர்கள் வெளியேறினார்கள்; அவர்களை மீண்டும் அழைத்துவந்து ஒடுக்கப்போகிறீர்களா எனவும் கேள்வியெழுப்பினர். கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது கருத்தை தேஜஸ்வி சூர்யா வாபஸ் பெற்றுள்ளார். "உடுப்பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன். அப்போது நான் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
எனவே நான் கூறிய கருத்துகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். வாபஸ் பெற்றதின் பின்னணியில் இருப்பது கோவாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தான் என சொல்லப்படுகிறது. கோவாவில் அதிகப்படியான கிறிஸ்தவர்களின் வாக்குகள் உள்ளன. இதனால் தான் இத்தாலி சென்ற பிரதமர் மோடி வாடிகன் சிட்டியிலுள்ள புனித போப்பாண்டவருடன் திடீர் சந்திப்பு மேர்கொண்டார். இதைக் கருத்தில்கொண்டே டெல்லி மேலிடத்திலிருந்து தேஜஸ்வி சூர்யாவுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. அதன் பின்பே அவர் தன் கருத்தை வாப்ஸ் பெற்றுள்ளார்.


