பீகார் சட்டப்பேரவையில் காலி மதுபாட்டில்கள்...மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தேஜஸ்வி யாதவ்

 
பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் கிடந்த காலி மதுபாட்டில்கள்

பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், முதல்வர் நிதிஷ் குமார் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மது விற்பனை செய்ய, அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலத்தில் முழு மதுவிலக்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்பட அம்மாநில மக்கள் முழுவதும் உறுதிமொழியை எடுத்தனர். இந்நிலையில், நேற்று பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள் கிடந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சட்டப்பேரவைக்குள் மதுபாட்டில்கள் வந்தது எப்படி?. முதல்வர் அவர்களே ஆய்வு செய்ய வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் மதுபான மாபியாவுடன் இருக்கும் படங்களை பார்த்தோம். நிதிஷ் குமார் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு குற்றம் செய்ய சுதந்திரம் உள்ளது. பீகார் மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் அறையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காலி மதுபாட்டில்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய (நேற்று) சம்பவம் பீகாரில் மதுவிலக்கு குறித்த உண்மையான நிலவரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிதிஷ் குமார்

மதுபாட்டில்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது: நான் துணை முதல்வரிடம் கேட்டேன்? இந்த வளாகத்தில் எங்கோ காலி மதுபாட்டில்கள் கிடைத்ததாக கூறினார். இது (சட்டப்பேரவையில் மதுபாட்டில்கள்) மிகவும் மோசமானது. இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? சபாநாயகர் முன்பு நான் இதை சொல்கிறேன், அவர் அனுமதித்தால் அனைவரையும் விசாரிக்க சொல்வேன். இன்றே அது. தலைமை செயலாளர் மற்றும் டிஜி.பி.யிடம் விசாரணை நடத்த சொல்வேன். இங்கு மதுபாட்டில்கள் வந்தால் அது சாதாரண விஷயமல்ல. இதை செய்கிறவனை விட்டுவிடக்கூடாது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா பேசுகையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் (முதல்வர் நிதிஷ் குமார்) கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.