கூண்டோடு கலைக்கப்படும் தமிழக பாஜக- நயினார் பதவி பறிப்பு?

 
nainar nagendran

தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கை டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழக பாஜக தலைமை கூண்டோடு கலைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுர்பா மற்றும் டி.கே.அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் பாஜகவில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற முழு அறிக்கையை கேட்டதை அடுத்து, ராம் மாதவ் தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது.

அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது கட்சி ஓரளவு செயல்பட்டதாகவும், அதன் பிறகு தமிழக பாஜக முற்றிலுமாக செயல்படவில்லை என்றும் ராம் மாதவ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி,தமிழக பாஜக நிர்வாகிகள் யாரும் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை, மக்கள் பிரச்சனைக்காக எந்த போராட்டமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை, இருக்கிற ஓட்டு வங்கியை கூட தக்க வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பிரதமர் மோடி என்ற ஒரு முகத்திற்காக மட்டுமே தமிழ்நாட்டில் கொஞ்சம் ஓட்டு விழுகிறது, அது பாஜக அனுதாபிகள் போடும் ஓட்டு தான், பொதுமக்கள் யாரும் பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை, கட்சி தலைவர்கள் முழுக்க முழுக்க மீடியாக்களை வைத்து விளம்பரம் மட்டுமே செய்து, தாங்கள் பிரபலம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். கீழே இறங்கி மக்களிடம் வேலை பார்க்கவில்லை என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சி நிதியை கையாள்வதில் முறைகேடு, பிரதமர் வருகையின்போது வரவேற்பு பட்டியலில் இடம் பெற பணம் வாங்கியது, புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கி அதை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தியது, சென்னை துறைமுகத்தில் மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி வசூல் செய்தது போன்ற பல விவகாரங்களும் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக பாஜக தலைமையை கூண்டோடு மாற்ற வேண்டும் என்றும், தற்போது பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு எதிர்காலத்தில் துளியும் இருக்கக்கூடாது என்றும் ராம் மாதவ் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட தலைமை கூண்டோடு கலைக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.