அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராகிறார் என்ற தகவல் பரவுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதுமே மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தனது மகன் டி. ஆர். பி. ராஜா அமைச்சராக வேண்டும் என்று பெரும் முயற்சியை எடுத்திருக்கிறார் டி. ஆ.ர் பாலு. அது அப்போது முடியாமல் போகவே தற்போது தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தகவல் பரவுகிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றது.
அப்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவர் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. அப்போது இல்லை என்றாலும் தற்போதைய தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என்ற உறுதியான தகவல்கள் வருகின்றன. அவருக்கு உள்ளாட்சித் துறை அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்.
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக வேண்டுமென்று ஆரம்பத்தில் இருந்து அவரது தந்தை டி.ஆர்.பாலு முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக மு க ஸ்டாலின் இடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து வந்து கொண்டே இருந்ததாகவும் கட்சி வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. தனது மகனுக்கு அமைச்சர் பதவி வழங்காததால் டி. ஆர். பாலு அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் , டி. ஆர். பாலுவை சமாதானப்படுத்தும் முயற்சியாகத் தான் டி. ஆர். பி. ராஜாவுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி வழங்கியதாகவும் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
தற்போதைய தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி என்கிற தகவல் பரவுகிறது. டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி என்பது உறுதியாய் இருக்கும் நிலையில் அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.