'கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’- எஸ்.வி.சேகர்
பாஜகவுக்குத்தான் நான் தேவை.. எனக்கு பாஜக தேவையில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்தத் தாக்ககுதலும் நடைபெறவில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல, என் சமூகத்திற்காக பேசுகிறேன். எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது அயோக்கியத்தனமான செயல்
பிராமணர்களுக்கு இனப்படுகொலை தமிழ்நாடு பாஜகவில் தான் நடக்கிறது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். ஒழுங்காகப் படிக்காத காரணத்தால்தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் லண்டனுக்கு படிக்கச் சென்றிருப்பதாகக் கூறுகிறார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராவதற்கு தகுதியில்லை என கூறினார்கள், ஆனால் அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர். தற்போது படிக்க சென்றுள்ளார், ஆனால் அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம் தான் எடுக்க முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான். தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக - அதிமுக தான. விஜய் வந்துட்டா உடனே எதுவும் மாறிடாது. விஜய்க்கு மிகப்பெரிய கூட்டம் ஓடி இருக்கிறது. ஆனால் அந்த கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது. அந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். உடனடியாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை” என்றார்.