துண்டு துண்டாக உடையும் அதிமுக! திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் ஆதரவாளர்கள்
பிற கட்சிகளில் இருந்து புறக்கணிக்கப்படுபவர்கள், துரத்தி அடிக்கப்படுபவர்களுக்கு எல்லாம் தாயுமானவராக முதலமைச்சர் இருப்பதோடு அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கு அன்பு சரணாலயமாக அறிவாலயம் மாறி இருப்பதாக மருது அழகுராஜ் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருது அழகுராஜ் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதை தொடர்ந்து அவருக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் அதிமுக, அமுமுக, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணிகளில் இருந்த அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுவில் இணைந்தனர். இதை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், அதிமுக, அமமுக உட்பட பல்வேறு அணிகளில் இருந்தவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பிரநிதிகள், கட்சிகளின் முக்கிய பொறுப்பில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். திமுக வலுவாகவும் மக்கள் செல்வாக்குடன் உள்ள நிலையில் மேலும் வலுசேர்க்கும் விதமாக திமுகவில் இணைந்துள்ளனர் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தக் கூடிய விதமாக நல்ல உணர்வோடு, நல்ல முடிவெடுத்து எடுத்துள்ளனர் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய, மருது அழகுராஜ், “கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக என்னை திமுகவில் இணைத்து கொண்டேன். இதை தொடர்ந்து என்னுடைய ஆதரவாளர்கள் என்னுடன் பயணிப்பவர்களும் இணை வேண்டுமென விரும்பினார்கள். இந்த நிலையில் தான் முதலமைச்சரின் முன்னிலையில் இணைந்துள்ளனர். மேலும் அனைத்து கட்சிகளில் இருந்து துரத்தி அடிக்கபடுவர்கள், புறக்கணிக்கபடுவர்களையும், அபகரிப்பு அரசியலை மேற்கொள்பவர்களிடம் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு எல்லாம் தாயுமானவராக முதலமைச்சர் இருக்கிறார்.மேலும், அறிவாலயம் என்பது அண்ணா திமுகவிலிருந்து வரக்கூடியவர்களுக்கு அன்பு சரணாலயம் மாறி இருக்கிறது” என்று தெரிவித்தார்.


