மதவாத அரசியலை தூண்டுவதில் அசாதுதீன் ஓவைசியை விட மம்தா பானர்ஜி தீவிரமானவர்... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
மம்தா பானர்ஜி

மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்த மம்தா பானர்ஜியை, மதவாத அரசியலை தூண்டுவதில் அசாதுதீன் ஓவைசியை விட மம்தா தீவிரமானவர் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டிவிட்டரில், மத்திய அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று நம் நாட்டில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியது என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் (அன்னை தெரசா சேரிட்டி) 22 ஆயிரம் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது என்று பதிவு செய்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அசாதுதீன் ஓவைசி

அதேசமயம், மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்தது. மேலும் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் செய்தி தொடர்பாளரும், வங்கி கணக்குகளில் இயல்பாக பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இந்நிலையில் அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் வங்கி கணக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரவித்த மம்தா பானர்ஜியை, மதவாத அரசியலில் அசாதுதீன் ஒவைசிக்கு மேல் மம்தாவின் இடம் வரும் பா.ஜ.க.  கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

சுகந்தா மஜூம்தார்

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறியதாவது: நாட்டில் மதவாத அரசியலை தூண்டுவதில் அசாதுதீன் ஓவைசியை விட மம்தா பானர்ஜி தீவிரமானவர். வகுப்புவாத அரசியலில் அசாதுதீன் ஓவைசிக்கு மேல் மம்தாவின் இடம் வரும்.மௌலானாக்கள், முவாஜிம்களுக்கு பணம் கொடுக்க தொடங்கினார். மேலும் அவர் கிறிஸ்துவர்களுடன் அதையே செய்ய முயற்சிக்கிறார். எல்லாவற்றிலும் மத்திய அரசையும், மதவாத கோணத்தை இழுப்பது மம்தா பானர்ஜியின் வழக்கம். மம்தா பானர்ஜி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க விரும்புகிறார். இது நம் நாட்டில் சிக்கலை தூண்ட விரும்பும் அண்டை நாடுகளுக்கு பயனளிக்கும். இதில் மம்தா பானர்ஜியின் பலன் என்ன? அத்தகைய பழக்கத்தை அவர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.