"இல்ல புரில்ல... தமிழ்நாட்டுல வேல செய்ய எதுக்கு இந்தி?" - சு.வெங்கடேசன் ஆவேச கேள்வி!

 
சு வெங்கடேசன்

மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பிரசார் பாரதி "இந்தி பிரச்சார பாரதியாய்" தன்னை நினைத்துக் கொள்கிறதா என்று தெரியவில்லை. பல் ஊடக பத்திரிக்கையாளர்" என்ற பதவிக்கான அறிவிக்கையை 11.01.2022 அன்று வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணியாம். எட்டே எட்டு காலியிடங்கள். தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில்தான் - சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை - அவர்களுக்கு வேலை. தூர்தர்சன், அகில இந்திய வானொலி ஆகியனவற்றிற்கு அவரது பணிகள் பயன்படுத்தப்படும். 

Su Venkatesan on new novel Velpari: 'Unfair to expect a fiction writer to  do the work of a historian'-Living News , Firstpost

அதற்கான தகுதியில் "விரும்பப்படும் கூடுதல் தகுதிகளில்" இந்தி அறிவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு என்ன கூடுதல் மதிப்பெண், முன்னுரிமை என்ற விவரங்கள் இல்லை. இது இந்தி அறியாத விண்ணப்பதாரர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தாங்கள் கழித்துக் கட்டப்படுவதற்கு இது காரணம் ஆக்கப்படுமோ என்று. போட்டியில் தங்களுக்கு தடைக் கல்லாக மாறுமோ என்று. நமக்கும் புரியவில்லை ஏன் இந்தி உள்ளே நுழைகிறது என்று. இந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிய குறிப்புகளும் இல்லை. இந்த பதவி புதிதானதா? 


இந்த பதவியில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு?  அந்த எண்ணிக்கை இட ஒதுக்கீடுக்கான வரம்பிற்குள் வருகிறதா இல்லையா? இது குறித்து மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்களுக்கும், பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ். வேம்பதி அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். "விரும்பப்படும் கூடுதல் தகுதி" பட்டியலில் இருந்து இந்தியை நீக்க வேண்டும், இட ஒதுக்கீடு பற்றிய விளக்கம் தரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.