கற்கள், பாட்டில் வீச்சு! சென்னையில் நாம் தமிழர் - ஆதித்தமிழர் மோதல்

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை இட சென்றதால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதால் அந்த இடமே சிறிது நேரம் போர்க்களம் போலும் மாறியது. பின்னர் போலீசார் வந்து நிலைமையை சரி செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் பேச்சை கண்டித்து மதுரையில் தமிழ் புலிகள் அமைப்பினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த நிலையில் ஆதித்தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தியவாறு சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்று இருக்கிறார்கள். ஆற்காடு சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள் போலீஸின் தடுப்பையும் மீறி பலரும் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்று இருக்கிறார்கள்.
அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கற்கள், பாட்டில்களால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்து விரட்டி இருக்கிறார்கள். இரு தரப்பிலும்ல் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போர்க்களம் போல் காட்சி அளித்திருக்கிறது. அதற்குள் போலீசார் வந்து இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.