சசிகலாவால் எனக்கு அச்சுறுத்தல் இல்லையென ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் - சிவி சண்முகம்
சசிகலாவால் எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்று முதல்வர் ஸ்டாலினும் டிஜிபியும், உள்துறை செயலாளரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி அன்று சசிகலா ஆதரவாளர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுகிறார்கள் என்றும், ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் பேசுகிறார்கள் என்றும் சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில் தனக்கு எதிராக ஆதரவாளர்களை தூண்டி விட்டதாகவும் சொல்லி ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் சிவி சண்முகம்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இருந்த ரோசனை காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை ரத்து செய்தனர் . அதற்கான சம்மன் திண்டிவனம் நீதிமன்றத்தின் மூலமாகவே அனுப்ப வேண்டி இருந்தது. ஆனால் ரோசனை போலீசார் சண்முகத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அன்று இதனை எதிர்த்த திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சிவி சண்முகம் நேரில் ஆஜராகி தனது தொலைபேசியில் சசிகலா ஆதரவாளர்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் பேசுகிறார்கள். இது பற்றி தன்னால் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போலீசார் அவற்றை முடித்து வைத்துள்ளனர் என்று கூறினார். தன் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம் , சசிகலாவும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார் இதுவரைக்கும் விசாரிக்காமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இது பற்றி திண்டிவனம் ,சென்னை காவல் நிலையத்திலும் விழுப்புரத்திலும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த புகார்கள் மீதும் இதுவரைக்கும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பாதுகாப்பு எனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று நான் வழக்கு போடவில்லை. எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு மற்றும் டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.