’நீங்க செஞ்சீங்கன்னு நான் செய்யல.. உங்கள மாதிரி எண்ணம் எனக்கில்லை..’ பேரவையில் பட்டியலிட்டு விவாதம் செய்த ஸ்டாலின்...

 
ஸ்டாலின்

கலைஞரின் எந்தெந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.


சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.  இந்த நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பட்டு வருகின்றன.  அதில்  அம்மா மினி கிளினிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.  அதில், “ அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் எனவும்,  அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள்  பட்டியலிடுகிறார்.  அப்படியான பட்டியல்களை படிக்க வேண்டுமானால் என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

  • அதில்,  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?? 
  • பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நினைவாக 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 மாடி அளவில் கட்டப்பட்ட மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை  பராமரிக்காமல் பாழடைய வைத்தது யார்?? 
  • அங்கிருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு இருந்த கலைஞரின் பெயரை மறைத்தது யார் ?? 
  • கலைஞர்  வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞரின்  பெயரை நீக்கியது யார்??
  • செம்மொழிப் பூங்காவில் கலைஞரின் பெயரை செடி கொடிகளை வளர்த்து மறைத்தது யார்?? பராமரிக்காமல் விட்டது யார்?? 
  • கடற்கரை பூங்காவிலிருந்த  கலைஞரின் பெயரை எடுத்தது யார்?? 

ஸ்டாலின்

  • ராணிமேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தின் பெயரில் நீக்கியது யார்? 
  • கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காகவே பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை பாழ்படுத்தியது யார்?
  •   உழவர் சந்தைகளை இழுத்து  மூடியது யார்? 
  • தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தை முடக்கியது யார்? 
  • நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வரும்முன் காப்போம்  திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டது யார்?
  • மதுரவாயல்- சென்னை துறைமுக உயர்மட்ட சாலை திட்டத்தை முடக்கியது யார்? 
  • சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்து  பாடலையும்,  ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடகக் கலை குறித்த பாடத்தில்  இருந்த கலைஞரின் பெயரை ஸ்டிக்கர் வைத்து மூடி மறைத்தது யார்? என வரிசையாக என்னால் நீண்ட நேரம்  பல கேள்விகளை கேட்க முடியும்..   இதை எல்லாம் நீங்கள் செய்தீர்கள், அதனால்தான் இதையெல்லாம் நாங்கள் செய்தோம் என்று சொல்ல வரவில்லை.  அப்படி நடந்து கொள்ளக்கூடிய எண்ணம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.  வரவும் வராது” என்று பேசினார்