பொதுச்செயலாளர் பதவியை பறிக்க எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்துள்ளது பூகம்பம்.
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தது. தொடர் தோல்விகள், கூட்டணி குழப்பங்கள், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி என அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என கட்சிக்குள் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தான் அதிமுகவின் முக்கிய புள்ளிகளான கொங்கு மண்டலத்தின் பலம் வாய்ந்த தலைவர் எஸ்.பி.வேலுமணி மற்றும் வடக்கு மண்டலத்தின் முக்கிய தலைவர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாட்களாக சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் ரகசிய இடங்களில் இவர்கள் தொடர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்.
முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால், அடுத்த கட்டமாக அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபித்து, அவரை பதவி நீக்கம் செய்யும் திட்டத்தை வகுத்து வருகின்றனர். இதற்காக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என 70% பேரின் ஆதரவை திரட்டும் பணியில் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை தக்க வைத்திருப்பவர் எஸ்.பி.வேலுமணி. தவெக தலைவர் விஜய் தரப்புடன் நல்ல நட்பில் இருப்பவர் - கூட்டணிக்கு உதவும் என கணக்கு. சசிகலா, டிடிவி தரப்பை கூட அரவணைத்து செல்லக்கூடியவர் என அதிருப்தி அணி கருதுகிறது.
எடப்பாடி தரப்பும் சும்மா இல்லை. தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை தனது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல். விரைவில் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுவது உறுதி.

