எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. உண்மையை விட அதிகாரம் முக்கியமாகி வருகிறது... மத்திய அரசை தாக்கிய சிவ சேனா

 
சிவ சேனா

உண்மையை விட அதிகாரம் முக்கியமாகி வருகிறது என்று 12 எம்.பி.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்தார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரிபுன் போரா

இந்நிலையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம் தொடர்பாக சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறியதாவது: உண்மையை விட அதிகாரம் முக்கியமாகி வருகிறது. அதை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்த சம்பவங்களை தவறாக பயன்படுத்தி, மாநிலங்களவையிலிருந்து 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்கிறீர்கள். அது தவறு. அதனால்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அப்போதே எடுக்க வேண்டும் கூறுகிறது. இப்போது அதை செய்வது என்ன பயன்? 

அரவிந்த் சாவந்த்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் மீது விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது, ஆனால்  அதை ரத்து செய்வதற்கு முன்பு அது (விவாதம்) நடக்கவில்லை. அதிகாரத்தின் அடிப்படையில் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இது ஜனநாயக படுகொலை. உண்மையை விட அதிகாரம் முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.