13 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடியில் இணைவார்கள்.. சரத் பவார் தகவலால் உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பு

 
சரத் பவார்

உத்தர பிரதேசத்தில்  13 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இது ஆளும் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேச பா.ஜ.க.வுக்கு நேற்று ஒரு மோசமான நாளாக அமைந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகிய 4 பேரும் நேற்று பா.ஜ.க.விலிருந்து விலகினர். இதில் சுவாமி பிரசாத் மவுரியா பா.ஜ.கவிலிருந்து விலகிய உடனே அகிலேஷ் யாதவை சந்தித்து சமாஜ்வாடியில் இணைந்து விட்டார். மற்றவர்களும் சமாஜ்வாடி கட்சியில்தான் சேருவார்கள் என்று தகவல்.

பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில்,  13 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடியில் சேருவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருப்பது பெரும் உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். உத்தர பிரதேச மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாநிலத்தில் மாற்றத்தை நிச்சயம் காண்போம். 

திரிணாமுல் காங்கிரஸ்

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்தில் மதவாத பிரிப்பு செய்யப்படுகிறது. இதற்கு  உத்தர பிரதேச மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.  உத்தர பிரதேத்தில்  13 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் சேருவார்கள். கோவா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.