தேசிய நலன் கருதி காங்கிரஸூடன் கைகோர்க்க மம்தா பானர்ஜி தயார்.. சரத் பவார்

 
மம்தா பானர்ஜி

தேசிய நலன் கருதி காங்கிரஸூடான தனது கருத்து வேறுபாடுகளை புதைத்து, மக்களவை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியை உருவாக்க மம்தா பானர்ஜி தயாராக இருப்பதாக சரத் பவார் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை திறமையற்ற மற்றும் தகுதியற்றது என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார்.

சரத் பவார்

இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான வேறுபாடு மேலும் அதிகரித்தது. இந்நிலையில்,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தேசிய நலன் கருதி காங்கிரஸூடான தனது கருத்து வேறுபாடுகளை புதைத்து, மக்களவை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியை உருவாக்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். சரத் பவாரின் இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சவுகதா ராய்

சரத் பவாரின் கருத்து குறித்து திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் சவுகதா ராய் கூறுகையில், இது ஒரு நல்ல அறிக்கை. சரத் பவார் நாட்டின் மூத்த தலைவர், அவர் எங்கள் கட்சி தலைவரை (மம்தா பானர்ஜி) கலந்தாலோசிக்காமல் கருத்து தெரிவித்ததாக நான் நினைக்கவில்லை என தெரிவித்தார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சுகேந்து சேகர் ராய் கூறுகையில், சரத் பவார் பேசியதற்கு நான் எப்படி கருத்து கூறுவது? என தெரிவித்தார்.