அதிமுகவில் விரைவில் பொதுச் செயலாளருக்கான தேர்தல்- செம்மலை

 
semmalai admk

அதிமுகவின் நிலவி வந்த குழப்பத்திற்கு உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

Panneerselvam camp appoints Semmalai as Whip - The Hindu

அதிமுகவில் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு,  இருவரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார்.  இதனையடுத்து  பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில்  ஆகஸ்ட் 17ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று  உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


இது தொடர்பான விசாரணை இருநபர் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இன்று அறிவித்த தீர்ப்பில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை  ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு நீதிபதிகளும்  தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில் சேலம் அண்ணா பூங்கா பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை முன்பு திரண்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு அதிமுக தொண்டர்கள்,  பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில்  நிலவி வந்த குழப்பத்திற்கு  உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விரைவில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும், அதில் தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று  கூறினார்.