எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்; அவரே அடுத்த முதல்வர்- செல்லூர் ராஜூ

 
 sellur raju

நீதிமன்றம் எந்த தீர்ப்பு  கொடுத்தாலும் அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

Sellur Raju calls BJP crowds "flock of crows", rift widens

தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை மேற்கு தொகுதியின் 10 பிரச்சினைகளின் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு வழங்கினார். அதில் மாநகராட்சி 82, 83 வார்டுகளில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் 973 குடும்பங்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும், மாநகராட்சி பகுதிகளான விராட்டிப்பத்து, பொன்மேனி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 63, 65 வார்டுகளில் தாழ்வாக செல்லக்கூடிய உயர் மின் கம்பிகளை அகற்ற வேண்டும், தொகுதிக்குள் அரசு இருபாலர் கல்லூரி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜு, “மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எவ்வளவு மனுக்கள் கொடுத்தாலும் நிறைவேற்றுவதில்லை, தற்போது முதல்வர் நிரைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 10 கோரிக்கைகளை மனுவாக அளித்து உள்ளேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர எங்கள் ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து விட்டோம், எங்கள் ஆட்சியில் கொரோனோவால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஆனது, தமிழக அரசு விரைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது, எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது, தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும். மாற்று கருத்து ஏதுமின்றி சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர ஆவார்” என கூறினார்