"அமைச்சர்" உதயநிதி வாழ்த்துகள்பா - சீமான் ஏன் திடீர்னு அப்படி சொன்னாரு?

 
சீமான்

உதயநிதி அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்ற விவாதம் எழுந்து கொண்டிருந்த போதே தடாலடியாக கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வெறும் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. எந்தவித கீழ் பொறுப்புகளும் வகிக்காமல் ஒரே நாளில் இளைஞரணி எனும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஸ்டாலினை கூட சகித்துக் கொள்வோம் உதயநிதியை வாரிசு அரசியலுக்குள் நுழைய சம்மதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.

சீமான் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம்: ஆண்டு வருமானம் ரூ.1,000 - வேட்புமனுவில்  தகவல்

ஆனால் இது எங்கள் கட்சி விவகாரம். இன்னொரு கட்சியைச் சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக முகாமிலிருந்து எதிர் கவுண்டர் வந்தது. நிலைமை இப்படியே போக, உதயநிதியோ அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். அதாவது தீவிர அரசியல். 2018ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய அவர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார். அப்போதே அது பிரச்சாரம் இல்லை. அச்சாரம் என்றார்கள். பின்னாளில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அது ஊர்ஜீதமாகி போனது. அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

அப்போதும் விவாதங்கள் எழுந்தன. வாரிசா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் உதயநிதி. பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலும் அவர் வென்றார். ஜெயித்த உடனே பட ஷூட்டிங் செல்லாமல், தொகுதிக்குச் சென்றார். அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்தார். திடீர் தீடீரென விசிட் அடித்தார். மக்கள் மத்தியில் வாரிசு என்பதை தாண்டி ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது. தற்போது ஷூட்டிங் கிளம்பி அரசியல் ஆப்லைன் மோடுக்கு சென்றுவிட்டார். இச்சூழலில் தான் உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுக அமைச்சர்கள் சொல்லிவைத்தாற் போல கூறி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது உதயநிதியின் ஆருயிர் நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷ். உதயநிதி அமைச்சராவது மக்களின் விருப்பமாக உள்ளது என முன்மொழிந்தார். அதற்குப் பின் செய்தியாளர்களை ஒவ்வொரு அமைச்சரிடமும் மைக்கை நீட்ட, அவர்களும் வழிமொழிந்தனர். தற்போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "உதயநிதியை அமைச்சராகவோ துணை முதல்வராகவோ  போட கூடாதுனு சொன்னா விட்டுருவாங்களா? அவர்களின் திட்டமே அதுதான். அவர் வருவார். வந்தால் வரவேற்கிறேன். வாழ்த்துவேன்" என்றார்.