"நாட்டையே ஆள துடிக்கிறேன்; இருக்க வீடு இல்ல" - உருகும் சீமான்!

 
சீமான்

நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. ஆனால் தேர்தலின்போது மக்கள் காலைவாரி விட்டுவிடுவார்கள். 2021ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வரையிலும் தொடர்ந்துள்ளது. ஆனால் சமூக வலைதள அரசியலில் எப்போதுமே ஆக்டிவ் தான். பேஸ்புக்கில் தேர்தல் நடத்தினால் நாம் தமிழர் கட்சிக்கே அமோக வரவேற்பு. சமூக வலைதளங்களில்தான் தொண்டர்கள் அதிகம். 

உப்புக்கும் வழியில்லாத அக்காலக் கட்டத்தில்… துக்கத்தை பகிரும் சீமான்

அதேபோல நெகட்டிவ் பப்ளிசிட்டியால் லைம்லைட்டிலேயே இருக்கும். அதற்குக் காரணம் சீமானின் பேச்சுகள். அவர் ஆயிரம் பேசுவார். ஆனால் எதையாவது ஒன்றை சர்ச்சையாக பேச, அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் ஹிட்டடிக்கும். அப்படியாக தான் இப்போதும் ஒரு காணொலி வைரலாகி வருகிறது. கடலூரில் நாம் தமிழர் நிர்வாகியான மறைந்த கடல்தீபன் பட திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சீமான் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், "எனக்கு இருக்க வீடே கிடையாது. ஆனால் இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். உண்மையாகவே எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. நம்ப மறுக்கிறாங்க. அடுத்த மாதம் காலி பண்ணணும். என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்க போவது? நானும் என் மனைவியும்னா பராவல்ல. நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம். ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடுறது? 


எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான். உங்களுக்கு தெரியுமா? கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில் இருந்து எந்த விடுதியிலும் எனக்கு தங்க இடம் கொடுக்க மாட்டாங்க. இப்போ எனக்கு வாழறதுக்கு வீடு இல்லை. நாட்டையே ஆள துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம். எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? எங்கேயிருந்து வருதுன்னு தெரியுது இல்ல? அதை பத்தி புலனாய்பு பண்ணுங்க” என்றார்.