மீண்டும் அதிமுக ஆட்சியை அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன் - சசிகலா
உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து, தமிழக மக்களை காத்திடுவேன் இது உறுதி என்று சசிகலா சூளுரைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகைப் புரிந்த சசிகலாவை பிரம்மாண்டமான முறையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சின்னாண்டி பக்தர் சிலை, ராஜாஜி சிலை மற்றும் காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனிடையே தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “ எம்ஜிஆர் அதிமுக இயக்கத்தை ஆரம்பித்தார்.அவரை தொடர்ந்து ஜெயலலிதா இயக்கத்தை வளர்த்து வந்தார். ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது. ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக உழைந்தார்கள். மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள். தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன், இது உறுதி” எனக் கூறினார்.