“என்னுடைய Entry தொடங்கிவிட்டது; 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி" - சசிகலா

 
பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலா பேட்டி


சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் பேசுவார். எம்ஜிஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியுள்ளார்.  ஜெயலலிதா சாதி பார்த்து பழகியவர் அல்ல.  அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்து வருகின்றனர். அவர்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சிலரது சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிமுகவில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சாதி அரசியல் செய்திருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேன்?


புரட்சி தலைவருக்கு பின் அம்மாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம். ஆனால் இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு. அதிமுகவின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு தற்போதைய சூழலில் சரியில்லை. இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமான அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. யாரையும் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருப்பார். என்னுடைய எண்ட்ரி தொடங்கிவிட்டது. 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி/

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கொடநாடு வழக்கு குறித்து பேசுவது ஏன்? கொடநாடு வழக்கு முடியும்போது தான் அனைத்தும் தெரிய வரும்” என்றார்.