‘பணமில்லா அரசியல்’ தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம்: சரத்குமார்

சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் சமத்துவ விருந்து விழாவில் அக்கட்சி நிறுவனர் சரத்குமார் கலந்துகொண்டு உணவு பரிமாறினார். சமத்துவ விருந்து விழாவில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளுடன் தொண்டர்கள், மக்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. இதில் சேலம் இரும்பு ஆலைப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விருந்தில் பங்கேற்றனர்.
சேலத்தில் சமக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “பணமில்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நல்ல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி மக்களுக்காக செயல்படுத்த வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை.
என்எல்சி விவகாரத்தில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். என்எல்சி விவகாரத்தில் கைவிட வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய் அரசிடம் வலியுறுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வைத்து வெற்றி பெறலாமே தவிர, மக்களின் நலத்திட்டங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.