சுயேட்சையாக போட்டியிட்டால் ஆதரியுங்க.. மனோகர் பாரிக்கரின் மகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சிவ சேனா
கோவாவில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர், பானாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டால் அவருக்கு எதிராக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்று சிவ சேனா கூறியுள்ளது.
கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பானாஜி சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் அதனாசியோ பாபுஷ் மான்செரேட்டை வேட்பாளராக களம் இறக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனாசியோ பாபுஷ் மான்செரேட்டை மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இவரை பானாஜி தொகுதி வேட்பாளராக அறிவிப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பானாஜி தொகுதியை 25 ஆண்டுகளாக தன் வசம் வைத்து இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர். தற்போது பானாஜி தொகுதியில் குற்ற பின்னணி உள்ள அதனாசியோ பாபுஷ் மான்செரேட் போட்டியிடுவதற்கு மனோகர் பாரிக்கர் மகன் உத்பால் பாரிக்கர் அதிருப்தி தெரிவித்தார். மேலும், வெற்றி மட்டுமே அளவுகோல் (அதுவும்) நேர்மை என்பது முக்கியமில்லை என்று அவர்கள் (பா.ஜ.க.) பரிந்துரைக்கிறார்களா?. குணம் முக்கியமல்லவா?. நீங்கள் கிரிமினல் முன்னோடி உள்ள ஒருவருக்கு டிக்கெட் கொடுக்க போகிறீர்கள், நாங்கள் வீட்டில் சும்மா உட்கார வேண்டுமா? என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், உத்பால் பாரிக்கருக்கு சுயேட்சையாக போட்டியிடும் ஆசையை சிவ சேனா தூண்டி விட்டுள்ளது. சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் டிவிட்டரில், பானாஜி தொகுதியில் உத்பால் பாரிக்கர் சுயேட்சையாக போட்டியிட்டால், ஆம் ஆத்மி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. அல்லாத கட்சிகளும் அவரது வேட்புமனுவை ஆதரிக்க வேண்டும். அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தக் கூடாது என நான் முன்மொழிகிறேன். இது மனோகர்பாய்க்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.