பிரதமர் மோடியை நான் பின்பற்றுகிறேன்.. அதனால் நான் மாஸ்க் அணியவில்லை... கிண்டலாக பதிலளித்த சஞ்சய் ரவுத்

 
பிரதமர் மோடி

பிரதமர் மோடியை நான் பின்பற்றுகிறேன், அவர் மாஸ்க் அணியவில்லை அதனால் நானும் மாஸ்க் அணிவதில்லை என்று சஞ்சய் ரவுத் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சஞ்சய் ரவுத் முககவசம் (மாஸ்க்) அணியாமல் இருந்தார். மகாராஷ்ராவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த சஞ்சய் ரவுத் மாஸ்க் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

சஞ்சய் ரவுத்

நாசிக் நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே சஞ்சய் ரவுத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறையை ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு சஞ்சய் ரவுத் பதிலளிக்கையில் கூறியதாவது:  பிரதமர் நரேந்திர மோடி மக்களை முககவசம் அணிய சொல்கிறார். ஆனால் அவர் அதை அணியவில்லை. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாஸ்க் அணிந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

ஆனால் மோடி தேசத்தின் தலைவர். நான் பிரதமரை பின்பற்றுகிறேன். எனவே நான் முககவசம் அணியவில்லை. மக்கள் கூட மாஸ்க் அணிவதில்லை. தற்போது தடை உத்தரவுகள் உள்ளன, ஆனால் பகலில் இது போன்ற தடைகள் எதுவும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன், அது (தடைகள்) பொருளாதார வளர்ச்சியை தடுக்கும். சுப்ரியா சுலே மற்றும் அவரது கணவர் சதானந்த் சுலே, பிரஜகத் தன்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.