அமலாக்கத்துறை ரெய்டு நடத்தட்டும்.. நான் அவர்களை வரவேற்பேன்.. சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

தனக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது குறித்து சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத், அமலாக்கத்துறை ரெய்டு நடத்தட்டும், நான் அவர்களை வரவேற்பேன் என்று தெரிவித்தார்.

சிவ சேனாவின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத். இவரது மகள்கள் பூர்வஷி மற்றும் விதிதா. இவர்கள் இருவரும் நடத்தி வரும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவர் சுஜித் பட்கர். அமலாக்கத்துறை கடந்த 3ம் தேதியன்று ரூ.1,034 கோடி  நில மோசடி வழக்கு தொடர்பாக சுஜித் பட்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது. இது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகள்களுடன் சஞ்சய் ரவுத்

அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை வரவேற்கிறேன், ஆனால் பொய் சொன்னால் அமலாக்கத்துறை பாதிக்கப்படும் என்று  சுஜித் பட்கருக்கு  சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார். சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: அவர்கள் (அமலாக்கத்துறை) ரெய்டு நடத்தட்டும். நான் அவர்களை வரவேற்பேன்.

அமலாக்கத்துறை

அரசியல் இலக்குகளை அடைய ஒரு ஏஜென்சி பொய் சொன்னால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதற்கு விலை கொடுக்க வேண்டும். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சிறை சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய பா.ஜ.க. அரசை சஞ்சய் ரவுத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.