உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் சிவ சேனா?

 
சஞ்சய ரவுத், பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் சந்தித்ததையடுத்து, எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்  காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி வைக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தது.  இந்நிலையில் எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சிவ சேனா கூட்டணி வைக்கும் என்று பேசப்படுகிறது.

காங்கிரஸ்

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கடந்த புதன்கிழமையன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இதன் பிறகு சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தர பிரதேசம் மற்றும் தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து பிரியங்கா காந்தி என்னிடம் விவாதித்தார் என்று தெரிவித்தார்.

சிவ சேனா

ஆனால் உத்தர பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ்-சிவ சேனா கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் இருவரும் ஆய்வு செய்ததாக கட்சி வட்டராங்கள் தெரிவித்தன. பிரியங்கா காந்தி சந்திப்பதற்கு ஒரு நாள் முன்புதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காங்தியை சஞ்சய் ரவுத் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.