சூடுபிடிக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்.. சித்தப்பாவுடன் கூட்டணியை உறுதி செய்த அகிலேஷ் யாதவ்..

 
சிவ்பால் யாதவ், அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

2017ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தாப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இறுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் ஆனவுடன் அவர்கள் இருவர்களுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது. சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார்.

பி.எஸ்.எல்.பி.

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், சிறிய கட்சிகளுடன் மட்டுமே என்று சொன்னதோடு இல்லாமல் செயலிலும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கினார். பல சிறிய கட்சிகளுடன் அவர் கூட்டணியை உறுதி செய்து விட்டார். மேலும் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

சமாஜ்வாடி

இந்நிலையில் நேற்று மாலை அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடங்கள் சிவ்பால் யாதவும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பி.எஸ்.எல்.-சமாஜ்வாடி கூட்டணி உறுதியானது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக டிவிட்டரில், பி.எஸ்.எல். தேசிய தலைவர் சிவ்பால் சிங் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து, கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். பிராந்திய கட்சிகளை அழைத்து செல்லும் கொள்கை தொடர்ந்து வலுவடைந்து, சமாஜ்வாடி மற்றும் பிற கூட்டாளிகளை வரலாற்று வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.