ஜெட் வேகத்தில் செயல்படும் அகிலேஷ் யாதவ்.. காங்கிரஸ், பா.ஜ.க. ஷாக்

 
அகிலேஷ் யாதவ்

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் சிறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் படுவேகமாக செயல்பட்டு வருகிறார். தற்போது ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.) கட்சியுடன் கூட்டணியை சமாஜ்வாடி உறுதி செய்துள்ளது.


மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாடி கூட்டணி வைக்காது, சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அதன்படி, உத்தர பிரதேசத்தில் செல்வாக்குமிக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை அமைத்து வருகிறார்.

ஜெயந்த் சவுத்ரி, அகிலேஷ் யாதவ்

தற்போது ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ஆர்.எல்.டி. கட்சிக்கும், சமாஜ்வாடிக்கும் இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஜெயந்த் சவுத்ரியும், அகிலேஷ் யாதவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சமாஜ்வாடி-ஆர்.எல்.டி. இடையே தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அகிலேஷ் யாதவ் ஆர்.எல்.டி. கட்சிக்கு 36 தொகுதிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதேசமயம் அந்த 36ல் 6 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியினர் ஆர்.எல்.டி. சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று தகவல்.

பா.ஜ.க.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஜெயந்த் சவுத்ரி கலந்து கொண்ட பிறகு, மேற்கு உத்தர பிரதேசத்தில் ஆர்.எல்.டி. கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். உத்தர பிரதேச தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைக்கும் வேலைகளை விரைந்து மேற்கொண்டு வருவது பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.