எங்க கட்சி ஆட்சிக்கு வரும், பழி வாங்குவோம்.. சர்ச்சை பேச்சால் சிக்கலில் சமாஜ்வாடி வேட்பாளர்

 
ஆதில் சௌத்ரி

உத்தர பிரதேசத்தில் எங்க கட்சி ஆட்சிக்கு வரும், நாம் எப்படி துன்புறுத்தப்படுகிறோமோ  அதற்கு பழி வாங்குவோம் என்று சமாஜ்வாடி வேட்பாளர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மீரட் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் ஆதில் சௌத்ரி.  எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும், எங்களை அடக்கியவாகளை பழி வாங்குவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆதில் சௌத்ரி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

சமாஜ்வாடி கட்சியினர் மத்தியில் ஆதில் சௌத்ரி பேசியபோது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆதில் சௌத்ரி, மாநிலத்தில் எங்கள் அரசாங்கம் அதிகாரத்துக்கு (ஆட்சிக்கு) வரும். இன்ஷா அல்லாஹ் அவர்களை விட்டு வைக்க மாட்டோம். அவர்களால் நாம் எப்படி துன்புறுத்தப்படுகிறோமோ, அதற்கு நாம் பழி வாங்குவோம். அதனால் அவர்கள் நம்மை சுரண்டுவதற்கு முன் 100 முறை யோசிப்பார்கள் என்று பேசுவது கேட்கிறது. பழிவாங்குவோம் என்று பா.ஜ.க.வைதான் மறைமுகமாக குறிப்பிட்டதாக பேசப்படுகிறது.

பா.ஜ.க.

இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையிடம் புகார் சென்றது. மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர் கூறுகையில், சமாஜ்வாடி வேட்பாளரின் (ஆதில் சௌத்ரி) பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேசமயம், நான் அல்ல, வாக்காளர்கள்தான் பா.ஜ.க.வை பழிவாங்குவார்கள் என்று சொன்னேன். ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக  என்று ஆதில் சௌத்ரி விளக்கம் அளித்தார்.