காஷ்மீரில் குப்கர் கூட்டணி உடைந்தது.. கூட்டணிக்கு குட்பை சொன்ன மக்கள் மாநாடு கட்சி

 
சஜ்ஜாஜ் லோன்

ஜம்மு அண்டு காஷ்மீரில் குப்கர் கூட்டணியிலிருந்து மக்கள் மாநாடு கட்சி வெளியேறியது. இதனையடுத்து குப்கர் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்பட 6 கட்சிகள் உள்ளடக்கிய மக்கள் கூட்டணி   குப்கர் பிரகடனத்துக்காக உருவானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் குப்கர் கூட்டணியிலிருந்து சஜ்ஜாஜ் லோன் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு (ஜே.கே.பி.சி.) கட்சி  வெளியேறியது. ஜே.கே.பி.சி. கட்சி தலைவர் சஜ்ஜாஜ் லோன், குப்கர் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான பருக் அப்துல்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் தொடர்ந்து கூட்டணியில் இருப்பது கடினம். 

பரூக் அப்துல்லா

கூட்டாளர்களிடையே நம்பிக்கை மீறல் உள்ளது. இது தீர்வுக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கட்சியில் உள்ள பெரும்பான்மையினர் கருத்து என்னவென்றால், குழப்பம் ஏற்படுவது வரை காத்திருப்பதை விட இணைக்கமான முறையில் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே. இனி நாங்கள் பி.ஏ.ஜி.டி. கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.  

ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு (ஜே.கே.பி.சி.) கட்சி

நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம், அதன் நோக்கங்கள் அல்ல, இந்த கூட்டணி உருவாக்கப்பட்டபோது நாம் வகுத்த நோக்கங்களை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.  மேலும் கூறப்பட்ட நோக்கங்களின் வரம்பிற்குள் வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நாங்கள் ஆதரவை வழங்குவோம் என்று பி.ஏ.ஜி.டி. தலைமைக்கு உறுதியளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.