முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதை நிரூபித்துள்ளது.. அகாலி தளம்

 
காங்கிரஸ்

பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதை நிரூபித்துள்ளது என சிரோமணி அகாலி தளம் குற்றம் சாட்டியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹானி. இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அண்மையில் 2 தினங்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது,  பூபிந்தர் சிங் ஹானிக்கு சொந்தமான இடங்களில் ரூ.8 கோடியும், அவருடன் தொடர்புடைய சந்தீப் குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.2 கோடியும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மருமகன் வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்ததை குறிப்பிட்டு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 பிக்ரம் சிங் மஜிதியா

பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதை நிரூபித்துள்ளது என சிரோமணி அகாலி தளம் குற்றம் சாட்டியுள்ளது. சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏ. பிக்ரம் சிங் மஜிதியா இது தொடர்பாக கூறியதாவது: பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதை நிரூபித்துள்ளது. ரூ.10 கோடி ரொக்கம் மற்றும் தங்கத்தை அமலாக்கத்துறை மீட்டெடுத்தது. அதற்கு எதிராக செயல்படுவதற்கு பதிலாக, காங்கிரஸ் மேலிடம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி

அதேசமயம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில், எனது குடும்பத்தினர் முறைகேடாக பணம் பெற்றிருந்தால் என்னை தூக்கிலிடவும் என்று தெரிவித்து இருந்தார். அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி பல கோடி ரூபாய் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.