பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பாராட்டி பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.. சச்சின் பைலட்

 
காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும்: சச்சின் பைலட்  நம்பிக்கை

பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பாராட்டி பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு  நிலவி வருகிறது. சச்சின் பைலட்டுக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், முதல்வர் பதவியை வேறுயாருக்கும் வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேன் ஆனால் சச்சின் பைலட்டுக்கு கொடுக்க மாட்டேன் என்பதில் அசோக் கெலாட் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் அவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு காரணம் தகவல்.

மோடி

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கார் தாமில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆதிவாசிகள் மற்றும் பிற பழங்குடியினரின்  கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், அசோக் (கெலாட்)  ஜி மற்றும் நானும் முதல்வர்களாக ஒன்றாக வேலை செய்தோம். எங்கள் முதல்வர்களில் அவர்தான் மூத்தவர். தற்போது மேடையில் அமர்ந்திருக்கும் முதல்வர்களில் கூட அசோக் ஜி இன்னும் மூத்த முதல்வர் என்று அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசினார். தற்போது அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சிக்குள் சச்சின் பைலட்  பரபரப்பை கிளப்பியுள்ளார். 

அசோக் கெலாட்

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நேற்று முதல்வரை பாராட்டியது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி இதே போல் நாடாளுமன்றத்தில் பாராட்டினார், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். கடந்த செப்டம்பர் 25ம் தேதியன்று வெளிப்படையான கிளர்ச்சிக்கு வழிவகுத்த, காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியின் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படும் மூன்று கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.