மரக்கிளையில் ரூ.1 கோடி பணம்! ரெய்டில் மோப்பம் பிடித்த அதிகாரிகள்!
மரக்கிளையில் ரூ.1 கோடி பணம் பதுக்கி வைத்திருந்ததை ரெய்டில் மோப்பம் பிடித்துவிட்டனர். அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவ நினைத்தவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஐடி ரெய்டில் இருந்து தப்பிக்க பணத்தை பல வகைகளிலும் பதுக்கி வைத்து வருகின்றனர் பண முதலாளிகள். ரகசிய சுரங்கம் அமைத்து பணம் பதுக்கி வந்தது எல்லாம் ஐடி அதிகாரிகளின் கண்ணில் பட்டுவிட, அதிலிருந்து தப்பிக்கும் விதமாக மரக்கிளைகளில் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். அதையும் மோப்பம் பிடித்து எடுத்திருக்கிறார்கள் ஐடி அதிகாரிகள்.
கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கர்நாடகாவில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்திருக்கிறது. புத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் குமார். இவரின் சகோதரர் சுப்பிரமணிய ராய் மைசூர் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதை அடுத்து அந்த வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள் . அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் கிளையில் ஒரு கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ரெய்டுக்கு வரும் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவ மரக்கிளையில் பதுக்கி வைத்திருந்தது கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.