வாழ்த்து மடலுக்குள் "அரசியல் மெசெஜ்"... முற்றும் ஆளுநர் vs திமுக அரசு யுத்தம் - வெடிக்கும் பனிப்போர்!
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டு ஆளுநரான ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். ஆனால் அது வாழ்த்து செய்தியைப் போல் அல்லாமல் திமுக அரசுக்கு விடுக்கப்படும் சவாலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. வாழ்த்தையும் தாண்டி அரசியல் உள்நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது. அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் முன் இரண்டு விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். முதலில் நீட் விவகாரம். திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போதும் சரி வெளியே இருக்கும்போது சரி நீட் விவகாரத்தில் அதன் நிலைப்பாடு மாறவில்லை. கூட்டத்தொடரை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின்.
இதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆனால் அதனை பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர். அதற்கான காரணம் என்னவென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலான மாநிலங்களில் மத்திய அரசின் பரிந்துரையால் குடியரசு தலைவரால் நியமிக்கப்படக் கூடிய ஆளுநர்கள், மத்திய அரசின் சார்பில் தான் செயல்படுகின்றனர். குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்கள். சதா காலமும் பாஜகவை எதிர்க்கும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். அந்த நெருக்கடியை ஆளுநர் மூலம் கொடுக்கிறது டெல்லி மேலிடம்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வரே நேரில் வலியுறுத்தியும் ஆளுநர் அசையவில்லை. இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்த தமிழக எம்பிக்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை சந்திக்காமல் வாசலில் இருந்தவாறே விரட்டாமல் விரட்டியடித்தார் அமித் ஷா. முதல் மூன்று முறை பொறுத்துக்கொண்ட திமுக எம்பி டிஆர் பாலு, 4ஆம் முறையும் இப்படியே நடக்க கோபத்தின் உச்சிக்கே சென்றார். அதன் வெளிப்பாடாகவே ஆளுநர் பதவி விலக வேண்டும் என கூக்குரலிட்டார். அமித் ஷாவை எதிர்த்து திமுக பெருந்தலைகள் விமர்சனத்தை முன்வைத்தனர். இதற்குப் பின்பே அவர் எம்பிக்களை சந்தித்தார்.
அடுத்ததாக தேசிய கல்விக்கொள்கை. தேசிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கை எனும் போர்வையில் இந்தியை மறைமுகமாக திணிப்பதாக திமுக கருதுகிறது. இதனால் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் இருக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறது. மத்திய அரசு முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கைக்குப் பதிலாக தமிழக அரசே மாநில கல்விக்கொள்கையை வகுக்கப் போவதாகவும் கூறிவிட்டது. விஷயம் இவ்வாறு இருக்க இன்று இதுதொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3ஆவது மொழி (இந்தி) அவசியம் குறித்து நீதிமன்றம் கூறியது.
ஆனால் அதற்கும் தீர்க்கமாக பதிலளித்த தமிழக அரசு, இருமொழி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை; 3ஆம் மொழி தேவைப்படுவோர் படிப்பதற்கு எந்த தடையும் இல்லை என தெளிவாகக் கூறிவிட்டது. முத்தாய்ப்பாக இன்று இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது நிச்சயம் மொழிப்போர் தியாகிகளுக்குச் செய்யும் மரியாதையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆளுநரின் வாழ்த்து செய்தியில் தமிழ் பற்றி பல நல்ல கருத்துகள் இருந்தாலும், மேற்கூறிய 2 விஷயங்களில் அரசியல் ஸ்டேட்மென்ட்டை அவர் விடுத்திருக்கிறார்.
அது மத்திய அரசின் ஸ்டேட்மென்ட்டாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அந்த வாழ்த்துச் செய்தியில், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை. அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான எதிர்மறை வேறுபாடுகள் கவலையைத் தோற்றுவிக்கின்றன. செலவுமிக்க தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேரமுடியாது. அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை. நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக, இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டியது நம்முடைய அவசரத் தேவை. உயர்கல்வியிலும், ஒருகாலத்தில் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும்" என நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்பதை இவ்வாறு மறைமுகமாக கூறியிருக்கிறார் ஆளுநர். இல்லை இல்லை மத்திய அரசு.
அதேபோல காலையில் இருமொழி கொள்கைக் குறித்து அரசு திட்டவட்டமாக கூறியிருக்கும் இவ்வேளையில், அதனை நீர்த்துப் போக செய்யும் வகையில் அதுகுறித்தும் வாழ்த்துச் செய்தியில் அரசியலைப் புகுத்தியுள்ளார். அதில், " உலகின் மிகத் தொண்மையான மொழி, தமிழேயாகும். இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிகச் செறிவுமிக்க மொழி. பல்வேறு பாரதீய மொழிகளுக்குத் தமிழ்மொழி பெருமை கூட்டியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்குத் தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதி இருக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட முனைப்புகளை நம்முடைய பல்கலைக்கழகங்களும் முன்னெடுக்கலாம். தமிழ்மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறியச் செய்கிற அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை. மொழிரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சேர்க்கை, நம் அனைவரையுமே வளப்படுத்தும், நாட்டைச் செம்மைப்படுத்தும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.